தோண்டப்படுகின்றன பயங்கரவாதிகளின் சடலங்கள்.

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருது சுனாமி கிராமத்தில் உள்ள வீடொன்றில், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சமர் இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவதாகக் கூறப்பட்டது.

குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net