நீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி பலி!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணை பெற்ற விரக்தியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் வைஸ்யா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இந்த வருடத்துக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

இதில் 720 மதிப்பெண்ணுக்கு 230 மதிப்பெண் மாத்திரமே குறித்த மாணவி பெற்றுள்ளார். ஆகையால் மன வருத்தத்துக்கு உள்ளான அவர், தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதன்போது அலறல் சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த குடும்ப அங்கத்தவர்கள் தீயை அணைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவி 600 புள்ளிகளுக்கு 490 புள்ளிகள் எடுத்திருந்த நிலையிலேயே, மருத்துவ கல்வியினை தொடர முடியாத நிலையில் குறித்த முடிவினை எடுத்திருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை இத்தேர்வில் தேசிய அளவில் 56.50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா உட்பட மேலும் சில மாணவிகள் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net