காணிகளை மீண்டும் மக்களிடம் கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்யப்பட்டு வந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வனவள திணைக்களத்தினரால் குறித்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு மக்களின் வாழ்வாதார செயற்றிட்டம் தடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கடந்த 2019.05.24ஆம் திகதிய நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த காணிகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் அமைச்சரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்றும் நடைபெற்றிருந்தது.

இதில் நாடாளமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன, வனவள திணைக்கள பொது பாதுகாப்பு அதிகாரி மகிந்த செனவிரத்ன, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் தொடர்புடைய தரப்பினரிடையே இணக்கம் காணப்பட்டு குறித்த வயல் காணிகளை உடனடியாக அளவீடு செய்து ஒரு மாத காலத்திற்குள் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net