கண்ணீர் சிந்தும் ஓவியத்தோடு வவுனியா சிறுவன் உயிரிழப்பு!

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு தரம் 6இல் கல்வி கற்றுவந்த சிவனேசன் விதுசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த விதுசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக முகநூலிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், வேறு சிலரும் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.

இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு வவுனியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net