விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை!

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களின் ஒற்றுமையற்ற செயற்பாடு கவலையளிப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

மலையகத்தில் அனைத்துக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், ஒன்றிணைந்து தமது மக்களுக்கான அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபா என்ற கோரிக்கையை விடுத்துள்ளனரா?

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 1,000 ரூபா கிடைக்க வேண்டும் என்பதிலும் பார்க்க, யார் அதனை பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதிலேயே தோட்டத் தொழிலாளர்களின் தலைமைகள் கண்ணும் கருத்துமாக செயற்படுவது போன்று தனக்கு தோன்றுகின்றது.

தற்போது யாழ்ப்பாணத்தை பொருத்தமட்டில் 1,200 ரூபாவிற்கும் குறைவாக நாட்கூலி எடுப்பவர்கள் இல்லை. சகல கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தமது மக்களின் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்க பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,200 ரூபாவையாவது வழங்க வேண்டும். கொடுப்பனவை செய்வதற்கு முதலாளிமாருக்கு பணம் குறைவென்றால், அரசாங்கம் தலையிட்டு நிதியுதவி செய்ய வேண்டும்.

மலையக மக்கள் மீது தங்களுக்கு கரிசனை இல்லை என எவருக்கும் கூற முடியாது. தேவை ஏற்படும்போது இவ்வாறான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் எனினும், மலையக அரசியல்வாதிகள், இது சி.வி. விக்னேஸ்வரனுக்கு தேவையற்ற விடயம் என கூறுவார்கள் என்பதால், கருத்துக்களை வெளியிடாது மக்கள் தொடர்பில் அனுதாபத்துடன் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net