வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி எஸ். நிலாந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினராகிய நாம் பல சுற்றி வளைப்புகளையும் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தோம்.
அதனடிப்படையில் தை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தவறிழைத்த 655 வியாபார நிலையங்கள் உற்பத்தி நிறுவனங்கள், கம்பனிகள், கம்பனி முகவர்கள் எமது குழுவினரால் அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதுவரை 611 வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டு அவற்றில் 595 வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா நீதிமன்றத்தால் தண்டமாக அறவிடப்பட்டது.
குறிப்பாக வர்த்தகர்கள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதல் காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், சுட்டுத்துண்டு இல்லாமல் அந்த லேபலில் போதிய விபரங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல், பாதுகாப்பு கருதி எஸ்எல்எஸ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட பொருட்களுக்கு பதிலாக அச் சான்றிதழ் அற்ற பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தவறுகளை மேற்கொண்டமையினாலலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தவறிழைத்த வியாபாரிகளை இனங்கண்டு தண்டம் விதிப்பது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பல தரப்பினருக்கும் பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் கடமைகள், பாவனையாளர் சட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் முகமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 36 விழிப்புணர்வு நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 33 விழிப்புணர்வு நிகழ்வுகளும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 3விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.