விக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு

புதிய தலமையை உருவாக்குவோம். நீதியரசர் விக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு

தமிழ் மக்களின் பிரச்சனைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை.

நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை. சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுயநலத்தை உதறி தள்ளிவிட்டு ஒன்றுபட்டு செயற்பட வருமாறு அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளை தமிழர் விடுதலை கூட்டணி வினைந்து அழைக்கின்றது. கடந்த கால வரலாற்றை நம் தலைவர்களில் சிலரும், அவர்களின் சில தொண்டர்களும் உதாசீனம்; செய்ததே இதற்கு காரணமாகும்.

1970ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்திற்கு புதிய குடியரசு அரசியல் சாசனத்தை உருவாக்க மக்கள் ஆணை வழங்கியிருந்தனர்.

அதனை தமிழ் மக்கள் எதிர்நோக்ககூடிய கஸ்டங்களை முன்கூட்டியே அறிந்த எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் இந்த புதிய அரசியல் சாசனத்தை எதிர்ப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீஜீ பொன்னம்பலம் அவர்களிற்கு கோரிக்கை விடுத்தார்.

ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்த இரு தலைவர்களும் தங்களிற்கிடையே 22 ஆண்டுகளாக காணப்பட்ட வேற்றுமைகளை மறந்து 1972ம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, அது 1976ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி என பேயர் மாற்றம் பெற்றது.

தமிழ் பிரதேசங்களில் இயங்கும் மிகப்பெரும் தமிழ் அரசியல் கட்சிகள் என்பதால்,இவ்விரு கட்சிகளின் இணைவு ஏக பிரதிநிதித்துவத்தின் தன்மையை இக்கட்சிக்கு வழங்கியது போல் தோன்றியது.

ஆனால் அது அப்படியல்ல. வேறுபல சிறிய கட்சிகளும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்ததுடன், இடதுசாரி கட்சிகளும் குறிப்பிடதக்க அளவு வலுவிழந்தன.

எது எப்படி இருப்பினும் உலகளாவிய ரீதியில் குடியேறியுள்ள இலங்கை தமிழ் மக்கள் இந்த ஒற்றுமையை மிகவும் பாராட்டி, இணைப்பை இரு பெரும்தமிழ் அரசியல் ராட்சகர்கள் மீள கை கோர்த்தமையை பலவிதத்திலும் பிரமாதமாககொண்டாடினார்கள்.

இவ்விரு தலைவர்களும் ஏற்கனவே நடந்தது போல மீண்டும் பிளவுபடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கவேண்டுமென்று தமிழர் விடுதலை கூட்டணியை தமது சொத்தாக தமிழ் மக்களிற்கு விட்டுச்சென்றனர்.

இந்த இணைப்பை மெலும் பலப்படுத்தவும், மலைநாட்டு தமிழ் மக்களையும் ஒரே கொடியின்கீழ் கொண்டுவரும் நோக்கத்தோடும் தான் வகித்த தலைவர் பதவியை தந்தை செல்வநாயகம் அவர்கள் 1976ம் ஆண்டு நடந்த கட்சி மாநாட்டில் தானாக முன்வந்து, கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ எஜ்.தொண்டமான் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார்.

தந்தை செல்வா, ஜீஜீ பொன்னம்பலம் ஆகியோரின் மறைவுக்கு பின்னர் 1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொது தெர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட முதலாவது பொது தேர்தலாகும். அத்தேர்தல் நியமனக்குழுவில் ஓர் அங்கத்தவராக கௌரவ எஸ் தொண்டமான் அவர்களும் இடம்பெற்றிருந்தார்.

தேர்தல் முடிவுகளில் சந்தேகத்திற்கிடமின்றி ஒற்றுமையை தமிழ் மக்கள் மிக பாரதூரமாக எடுத்துக்கொண்டார்கள் என்பது தெளிவாகியது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழர் விடுதலை கூட்டணி ஈட்டிய வெற்றி ஒவ்வொருவரையும் தமக்கிடையே நிலவி வந்த பேதங்களை மறந்து, மீண்டும் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் பழகினார்கள்.

ஆயுதம் தாங்கிய குழுக்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கியவரை இந்த ஒற்றுமை நீடித்தது, அதன் பின்னர் தொடர்ந்த நீண்டகால யுத்தம் காரணமாக பல்வேறு இழப்புக்கள் மற்றும் அரசியல் ரீதியான சவால்களிற்கு மத்தியில் தொடர்ந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் யாவருக்கும் ஏற்பட்டது. சாத்வீக போராட்டம் தோற்றமையினால்தான் ஆயுத குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ன என்ற கூற்று ஏற்க கூடியதல்ல.

நடந்துபோன விடயங்களை மீண்டும் கிளறிபார்க்க நான் விரும்பவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். ஆனால் சில விடயங்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். விரும்பதகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துர்பிரயோகம் செய்யக்கூடாதென்ற ஒரே காரணத்திற்காகவே தனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வைத்திருந்தார் என்றும், தமிழரசு கட்சியை அவரிற்கு ஒருபோதும் புனரமைக்கும் எண்ணம் இருக்கவில்லை என்றும், அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துர்பிரயோகம் செய்யவும், அதனை புனரமைக்க முயல்வதும் கவலைக்குரியது எனவும், இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை முறியடித்திருக்கின்றார்கள் எனவும் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் மிக்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நான் மிக அழுத்தம் திருத்தமாக கூறுவது யாதெனில், திரு செல்வநாயகம் அவர்களோ, திரு ஜீஜீ பொன்னம்பலம் அவர்களோ அன்றி தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்களோ இவர்களில் எவரும் தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்ய ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

இந்த கைங்கரியத்தை ஒரு பேராசை பிடித்த நபர், தந்தை செல்வா இறந்து 28 ஆண்டுகளின் பின் தன்நலம் கருதியே செய்துள்ளார். அதேபோல், தமிழ் தேசிய கூட்மைப்பு என்ற பெயரை காலத்திற்கு காலம் பயன்படுத்தி மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் எனுவம், தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்கின்றதாகவும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள்.

வெற்றி பெற்றவுடன், தங்களிற்குள் தனியாக குழுவாக பிரிந்து செயற்படுவார்கள். அதன் விளைவை கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரதிபலித்ததை நாம் கண்கூடாக பார்த்தோம்.

தொடர்ந்தும் அந்த மாயைக்குள் சிக்கி தவிக்காமல், மக்கள் விடுபட்டு; வந்து உண்மையை உணர்ந்து செயற்பட ஆரம்பித்தமையாலேயே உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதே சிந்தனையில் மக்கள் செயற்பட்டால் பிரச்சினைகளிற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

இக்கட்டத்தில் எதுவித பதவிகளிற்கும் ஆசைப்படாது 60 ஆண்டுக்கு மேல்மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த நான், எனது அரசியலில் இன்றைய நிலைப்பாட்டை நம் மக்களிற்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். சட்டக்கல்லூரியில் 60 ஆண்டுகள் திரு விக்னேஸ்வரன் அவர்களை நான் அறிவேன்.

இரண்டொரு சந்தர்ப்பத்தில் அவரைப்பற்றிய தப்பான அரசியல் விமர்சனங்கள் வந்தபோது, அவற்றையும் கண்டித்துள்ளேன். ஒனறு மட்டும் உறுதியாக கூற என்னால் முடியும். ஏனைய சிலர் தொடர்ச்சியாக செய்தது வருவதுபோல அவர் நம்மினத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை நான் அறிவேன்.

ந்த நிலமையைதான் தீர்க்கதரிசனமாக ‘ஆண்டவன்தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும’ என அன்று தந்தை செல்வா கூறியிருக்கலாம்.

இன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது. அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டென்பதை சகல கட்சிகளின் தலைவர்களும் தம் தம் மனச்சாட்சியை தொட்டு கேட்க வேண்டும்;. ஆகவே, திரு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியின் தலமை ஏற்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம்.

இதே ஏற்பாட்டைதான் நான்கு ஆண்டுகளிற்கு முன்னர் அவரிற்கு எமது கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்தேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். எனவே, 1972ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சிகள் ஒன்றாக சங்கமித்தமையேயன்றி, பங்காளிகளாக இருக்கவில்லை.

இதேபோன்றதொரு நிலமை ஆரம்பத்திலேயே உருவாகுமாக இருந்தால், தேர்தல் முடிந்ததும் அனைவரும் ஒரே கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை ஏற்று, புதிய நிர்வாகத்தையும் தெரிய வைத்து தந்தை செல்வாவின் கனவை நனவாக்குவோம்.

என்னைப்பொறுத்தவரையில், எமது பிரச்சினை தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைக்கின்றேன்.

அன்புடன் இன ஒற்றுமையை விரும்பும்
வீ.ஆனந்தசங்கரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net