ஆனந்தபுரத்தில் பெருமிதம் கொண்ட சஜித் பிரேமதாச!

ஆனந்தபுரத்தில் பெருமிதம் கொண்ட சஜித் பிரேமதாச!

செமட்ட செவன வீட்டமைப்பு மாதிரிக்கிராமங்களை அமைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையாகத் திகழ்கின்றது என்றும், இதனை நான் பெருமையாகக் கூறிக் கொள்கின்றேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் 2500 வீட்டுத்திட்டங்களை இலங்கையில் அமைப்பது எனது நோக்கமாகும்.

அதனுடைய இரண்டாம் கட்டமாக 5000 வீட்டுத்திட்டங்களையும், மூன்றாம் கட்டமாக 10000 வீட்டுத்திட்டங்களையும், நான்காம் கட்டமாக 20000 வீடுகளை அமைக்கவுள்ளோம்.

2025ஆம் ஆண்டு வரும்போது இலங்கையிலே உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், வீடற்றவருக்கு வீடு வழங்கி 20000 வீட்டுத்திட்டங்களை நிறுவுவதே எனது பிரதான நோக்கமாகும்.

இன்றுவரை கிட்டத்தட்ட 1682 கிராமங்களுக்கான வீட்டுத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன.

இன்னும், 818 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்காக வேண்டி எமக்கு இன்னும் 245 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளது.

இருக்கின்ற நாட்களுக்குள் ஒரு நாளைக்கு 3 திட்டங்கள் வீதம் வேலைகளை திட்டமிட்டு நாம் அவற்றைத் துரிதப்படுத்திக் கொண்டு செல்லுகின்றோம்.

நான் ஏனையவர்களைப்போல் இனவாதத்தை, மத வாதத்தை தோற்றுவித்து, மதப்பிரச்சாரங்களை உருவாக்குபவன் இல்லை.

இவ்வாறான செயற்பாடுகளில் நான் ஏற்கனவே கூறிய சிலர் செய்து வருகின்றார்கள் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9762 Mukadu · All rights reserved · designed by Speed IT net