வரவு – செலவுத்திட்டம் 5ஆம் திகதி நாடாளுமன்றில்!

வரவு – செலவுத்திட்டம் 5ஆம் திகதி நாடாளுமன்றில்!

2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்படும் இந்த வரவு-செலவுத்திட்டத்தில், வழமைபோல இம்முறையும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5ஆம் திகதி நிதி அமைச்சரின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான உரை மாத்திரமே இடம்பெறுமென்றும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுமென கூறப்படுகின்றது.

மேலும் 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 4ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று, 5 ஆம் திகதி வரவு– செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை, வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் தினத்தில் பார்வையாளர் கலரி மூடப்பட்டிருக்கும் என்பதோடு, முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக ஆராய்வதற்காக அன்று மாலை அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் நடைபெறவுள்ளன.

Copyright © 1967 Mukadu · All rights reserved · designed by Speed IT net