வடக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி!- தடுத்து நிறுத்த கோரிக்கை!
சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”காங்கேசன்துறை, வலி வடக்கு பிரதேசம், கீரி மலை மற்றும் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் நில அளவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, மொறக்கொட்டான்சேனை பகுதியிலுள்ள ஆரம்பகல்வி பாடசாலை 1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் பிடியிலுள்ளது.
29 வருடங்களாக இராணுவம் வசமுள்ள இந்த பாடசாலை கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வவுணதீவு தாண்டியடி மயான பூமியில் விசேட அதிரடிப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை விடுவிக்கவும் நடவடிக்கை வேண்டும்.
அதேபோன்று, யுத்தத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கான காணி, வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.