யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது.
இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்திலிருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர்.பொன்.இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்ப்பட்டுள்ளதாக மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.