யாழ். வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்!

யாழ். வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்!

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன.

வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றதாலே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

யாழ். கண்டி பிரதான வீதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றே குறித்த நபரின் மீது ஏறிச்சென்றுள்ளது.

35-40 வயது மதிக்கத்தக்க நபரே படுகாயமடைந்தார் எனினும், அவர் தொடர்பான விபரங்கள் ஏதும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மதுபோதையில் வீதியோரம் படுத்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வைத்திய பரிசோதனை அறிக்கையின் பின்னரே அதை உறுதி செய்யலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் விபத்திற்குள்ளாகி வெகு நேரமாக வீதியில் கவனிப்பாரற்று கிடந்த நிலையில் நேற்று மாலை அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இரண்டு கால்களும் சிதைவடைந்த நிலையில் வீதியோரத்தில் குறித்த நபர் வெகு நேரமாக கிடந்துள்ள போதும், பலர் அவரை கடந்து சென்ற போதும் ஒருவர் கூட குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கவோ அல்லது முதலுதவி செய்யவோ முன்வந்திருக்கவில்லை.

பலர் குறித்த நபரை வீடியோ எடுத்தும் புகைப்படங்களை எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது வளர்ந்துவரும் செல்பி நாகரீகமும் சமூக வலைத்தளங்களின் உச்சக்கட்ட வளர்ச்சியும் மனிதரிடத்தில் உள்ள மனிதத்தை முற்றிலும் சிதைத்துவிட்டிருக்கின்றது.

மூன்று தசாப்த காலமாக கொத்து கொத்தாக தம்மைச் சார்ந்த உயிர்கள் கொல்லப்பட்டதன் வலி அறிந்த சமூகம் இன்று நாகரிக வளர்ச்சியால் ஒரு உயிர் துடிதுடித்து சாவதை காணொ ளி எடுத்து இரசிக்கும் அளவிற்கு கொடூரம் அடைந்துள்ளது.

மனிதாபிமானமற்ற குறித்த செயல்களால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தலைகுணிவை எதிர்நோக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மரணித்தது தமிழ் இனம் மட்டுமா அல்லது அவர்களின் மனிதமுமா என கேள்வி எழுவும் இழிநிலைக்கு எம் சமூகம் தள்ளப்பட்டுள்ளமை மிக வேதைனைக்குரியதே.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net