பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது!

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது – கிளிநொச்சி படைகளின் தளபதி

கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை அது அபிவிருத்திக்காக எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் ரவிப்பிரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று(11) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலகத்திற்குரிய காணியும் அதனோடினைந்த விளையாட்டு மைதானத்தையும் பாடசாலைக்கு கையளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது இதற்கு பதிலளிக்கும் போதே கிளிநொச்சி இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் படை முகாம்கள் இருப்பது மக்களின் பாதுகாப்புக்கே. எனவே படைமுகைாம்களை அகற்ற முடியாது.

கொழும்பு போன்ற இடங்களில் பல பாடசாலைகளுக்கு பாடசாலையில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில்தான் விளையாட்டு மைதானங்கள் உண்டு எனத் தெரிவித்த தளபதி தான் விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசியதாகவும், கிளிநொச்சி விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்த பின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் எனவும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை கூட அங்கு நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இராணுவ முகாம்களுக்கு ஊடாக பாதை வழங்க முடியாது என்றும் அங்கு பொது மக்கள் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்ல முடியாது அதற்கு அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார் கிளிநொச்சி படைகளின் தளபதி ரவிப்பிரிய தெரிவித்துவிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net