குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்!
யாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலியில் காணப்பட்ட இராட்சத குளவிக்கூடு, காற்று வீசியதைத் தொடர்ந்து உடைந்துள்ளது.
அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று (01) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ். மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அப்பாப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, இச்சம்பவத்தில் அவரது மனைவியான சு.மகாலட்சுமி (வயது 63) மற்றும் மனைவியின் சகோதரியான கா.கோணேஸ்வரி (வயது 60) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20தொழிலாளர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு 07 ஆம் இலக்க தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளன.
இன்று (02) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 19 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.