சாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்!

சாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்!

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன் செயலிழந்துள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் இணைத்து, கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே கிராம சேவையாளர்களிடம் பொலிஸார் குடும்ப விபரங்களை கோரினார்கள்.

பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர்கள் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத குடும்பங்கள் இருப்பின் உடனடியாக அவர்களை இனங்கண்டு பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

குடும்பங்களோ தனி நபர்களோ பதிவுகளை மேற்கொள்ளாது இருப்பின் அதுகுறித்து தமக்கு அறியத்தருவதோடு. பதிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் இடர் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

பாடசாலைகள் குறித்து கிராம சேவையாளர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தினமும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார். மேலதிக தேவை ஏற்படின் இராணுவத்தினரின் உதவியை நாடுவோம்.

அதேவேளை, செயலிழந்துள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் இணைத்து, கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net