வித்தியா கொலை வழக்கு – ஏழு பேருக்கு தூக்கு – 30 வருட சிறை – 10 இலட்சம் நட்டஈடு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.
2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் ஆகியோர் வித்யாவைக் கடத்த திட்டம் தீட்டியமை, கடத்தியமை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனையும் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபா தண்டமும் தண்டம் செலுத்தத் தவறின் நான்குமாதச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடும் இழப்பீடு வழங்கத் தவறின் 02 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் சகல குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக மரணதண்டனையும் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு 70 ஆயிரம் ரூபா தண்டமும் தண்டம் செலுத்தத் தவறின் ஏழு மாதச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடும் இழப்பீடு வழங்கத் தவறின் 02 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார். மூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசித்தார்.
அவர் தனது தீர்ப்பில் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின் விளக்கங்கள் கோரப்பட்டன.
இந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மரணதண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தீர்ப்பைக் கேட்டதும், குற்றவாளிகளின் உறவினர்கள் ஓலமிட்டு அழுதனர்.

நன்றி..வாகீசம் இணையம்

Copyright © 6614 Mukadu · All rights reserved · designed by Speed IT net