பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், எம்.கே.சிவாஜிலிங்கம் முன்பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் பூர்வீக வீடிருந்த காணியில், சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் கேக்கினை பறிமுதல் செய்திருந்ததுடன் சிவாஜிலிங்கத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளின் பின்னர் விடுவித்திருந்தனர்.

ஆனாலும் அதற்க்கு பின்னரும் சிவாஜிலிங்கம் உள்ளடங்கலாக அக்குழு கேக் வெட்டி குறித்த நிகழ்வை கொண்டாடியிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கடந்த மாதம் வல்வெட்டித்துறை பொலிஸார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் கடந்த 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இதனை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் தன்னை பொலிஸார் எந்நேரமும் கைது செய்யக்கூடிய நிலைமை உள்ளமையால் தனக்கு முன்பிணை வழங்க வேண்டும் என சிவாஜிலிங்கம் தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்பிணை வழங்குவது தொடர்பிலான விசாரணைகள் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் மன்றில் சிவாஜிலிங்கத்தையும் முன்னிலையாக பணித்தார். அதன் பிரகாரம் கடந்த 07ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கின் பொது சிவாஜிலிங்கம் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், முன்பிணையில் அவசியத்தை வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை ஆராய்ந்த மன்று எதிர்வரும் 28ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருந்ததுடன், அந்நாளில் முன்பிணை தொடர்பான கோரிக்கையினை எழுத்து மூலம் சமர்ப்பிக்க பணித்தமை குறிபிடத்தக்கது.

Copyright © 9184 Mukadu · All rights reserved · designed by Speed IT net