தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள்!

தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள்!

தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண அரசு உறுதி வழங்கிய போதும் அதனை நிறைவேற்ற இன்றுவரை தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் அஹிம்சை ரீதியில் போராட்டத்தில் குதிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஓர் ஆசனத்தை தவிர ஏனைய ஆசனங்களை கூட்டணி கைப்பற்றியிருந்தது.

அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டங்களை, தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக காந்திய வழியில் சத்தியாக்கிரக போராட்டங்களை முன்னெடுத்திருக்கலாம்.

அவ்வாறு செய்திருந்தால் குறுகிய காலத்தில் எமக்கான சுயாட்சியை பெற்றிருக்க முடியும். பெரிய அளவில் வன்முறைகளுக்கு நாம் முகம் கொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. எமது போராட்டத்தில் நாம் தவறிழைத்துவிட்டோம்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண அரசு உறுதி வழங்கியது. அதனை நிறைவேற்ற அரசு இன்றுவரை தவறிவிட்டது.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் அஹிம்சை ரீதியில் போராட்டத்தில் குதிப்பார்கள். எமக்கான தீர்வுகளை நாம் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

தமிழ் அரசியல் கைதிகள் காந்தியின் வழியில் போராடுகின்றனர். அன்று எமது விடுதலைக்காக தியாக தீபம் திலீபன் அஹிம்சா வழியில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்தார்.

எமது தரப்பு அன்று ஆயுதம் ஏந்தியிருக்கலாம். ஆனால், நாம் எமது தீர்வுகளை அஹிம்சை வழியில் காண்பதற்கே முயல்கின்றோம்.

காந்தி இலங்கை வந்தபோது, இந்திய விடுதலைக்காக தமிழ் மக்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

1977ஆம் ஆண்டு காலத்தில் அப்போதைய தமிழ் தலைவர்கள் அஹிம்சை ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் இளைஞர்கள் தவறான வழியில் பயணித்திருக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மனவேதனையுடனேயே சபையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள தமிழ் இளைஞர்கள், தமது இறுதி ஆயுதமாக மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டத்தையே கையில் எடுத்துப் போராடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 8944 Mukadu · All rights reserved · designed by Speed IT net