இலங்கையின் வடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்!

வடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்!

இலங்கையின் வடக்கில் நூறாயிரத்திற்கும் அதிகமான விதவைகளும் கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகளும் உள்ளனர் என இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வை முன்னெடுத்த தமிழகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஆய்வை நிறைவு செய்த குறித்த குழுவினர், நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் இந்தியா திரும்பியுள்ளனர்.

இவர்கள் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்ததோடு, ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பாலியல் தொல்லைகள், குடும்ப வறுமைகள், கடன் தொல்லைகள் என்பன வடக்கு கிழக்கில் நிறைந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு கடன் கொடுத்து, அவர்களை துன்புறுத்த ஒரு கொள்ளை கூட்டமே இயங்கி வருகின்றது என்றும், இதனால் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தோண்டப்படும் புதைகுழியை பார்வையிட்ட போது, சிறுவர்களின் எச்சங்களையும் காண முடிந்தது என்றும், விவசாய நிலங்களிலும் எழும்புக்கூடுகள் எடுக்கப்படுவதாகவும், அவற்றை நேரில் பார்த்தபோது மனம் வேதனையாக இருந்ததென்றும் கூறினார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையினால் வடக்கு கிழக்கு இளம் தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Copyright © 0013 Mukadu · All rights reserved · designed by Speed IT net