யாழில் தொடர்ச்சியாக கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் கைது!

யாழில் தொடர்ச்சியாக கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் கைது!

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நடமாடியுள்ளனர்.

குறித்த நபர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டனர்.

பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் இருவர் அகப்பட்டனர். அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் குறித்த நபர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர்.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும் குறித்த நபர்கள் பிணையில் வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Copyright © 9686 Mukadu · All rights reserved · designed by Speed IT net