“பாராளுமன்றம் சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்துக்கு செல்வோம்”
“பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் செல்வோம்.
அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை. இதைத் தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளாது”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைத் தாண்டுவதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியாது.
அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்பதை அரசியல மைப்பின் 19 ஆவது திருத்தம் தெளிவாகக் கூறுகின்றது. இது பளிங்கு போல தெளிவானது.
அப்படியிருக்க, பாராளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றம் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாது, அனுமதிக்காது.
ஒரேயொரு விடயம். இது தொடர்பான உத்தரவை நாம் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை.
பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் அல்லாடும் தரப்புகளுக்கு இந்தக் கால அவகாசம் ஒரு உதவியாக – வாய்ப்பாக அமையக்கூடும்.
இப்படி பாராளுமன்றத்தைக் கலைப்பது சட்டவிரோதமானது; அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் இதனைச் செய்பவர்கள் அதன் மூலம் சிறிது கால அவகாசமாவது தமக்குக் கிடைக்கும் என்று கருதியே இதனை முன்னெடுக்கின்றார்கள் போலும்.
வார விடுமுறையை ஒட்டி இதனைச் செய்தால், நீதிமன்றை நாடுவதற்கான நாட்கள் இன்னும் இரண்டு தினங்கள் பின்னால் போகும் என அவர்கள் கணக்கிட்டிருப்பார்கள் போலும்.
பாராளுமன்றத்தைக் கலைத்தால் அது தொடர்பான உத்தரவை சவாலுக்கு உட்படுத்தும் தயார் நிலையில் பல டசின் கணக்கான தரப்புகள் தயாராக இருக்கின்றன” என்றார்.