வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக முறைப்பாடு!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக முறைப்பாடு!

மூன்றாம் தவணைப் பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைக்கு அனுப்பிய மாணவனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெள்ளிக்கிழமை நான் தரம் 8 இல் படிக்கும் எனது மகனை மூன்றாம் தவணை பரீட்சை எழுதுவதற்காகவே பாடசாலைக்கு அனுப்பினேன்.

ஆனால் எனது மகன் வகுப்பறையிலிருந்து வீதிக்கு அழைத்து வரப்பட்டு மகனுக்கு விருப்பமில்லாத நிலையில் பாடசாலை அதிபருக்கு சார்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றச் செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னரே வகுப்பறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நான் பாடசாலைக்கு அதிபரை நம்பியே எனது மகனை அனுப்பி வைக்கிறேன்.

அவர் பாடசாலையில் இருக்கும் 7 மணித்தியால நேரமும் அவருக்கு முழு வழிகாட்டியும் பொறுப்புதாரியும் பாடசாலை அதிபரே ஆவார்.

அதிபர் பாடசாலையில் இருக்கும் போது தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கான முழு மொத்த பொறுப்பையும் அதிபரே எடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது என நான் அறிகிறேன்.

எனவே சட்டத்திற்கு புறம்பான வழியில் எனது மகனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபத்திய அதிபரை அழைத்து விசாரணை செய்து உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1706 Mukadu · All rights reserved · designed by Speed IT net