முஸ்லிம் சமூகம் அபிவிருத்திக்காக போராடி, எந்த உரிமையை இழந்திருக்கிறது…?

முஸ்லிம் சமூகம் அபிவிருத்திக்காக போராடி, எந்த உரிமையை இழந்திருக்கிறது…?

மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காக பணியாற்றி துரோகி பட்டம் சூடிக் கொள்வதை மேலானதாக நினைப்பதாக பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் அண்மையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இங்கு பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே புனர்வாழ்வு என்ற அடிப்படையில் 11,900 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலே 217அரசியல் கைதிகளில் நூறு பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய 117 பேரையும் விடுதலை செய்வதற்காக எத்தனை ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தினோம். ஆனால் எதனையும் சாதிக்க முடியவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் 2015 மார்ச் 31ஆம் திகதியன்று 52,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் நாங்கள் ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மூன்றரை வருடகாலத்தில் 300 பட்டதாரிகளுக்கு கூட வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய போது, ஆளுங்கட்சியின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அவ்வாறிருக்கையில் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாப்பதற்காகவும் கைகளை உயர்த்தினோம். ஆனால் எமது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

தற்போது யார் ஆட்சியமைப்பது என்ற பலப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை கட்சிகள் தமது சமூகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் மட்டக்களப்பின் எதிர்காலத்தில் உரிமையும் நாங்கள் தான், அபிவிருத்தியும் நாங்கள் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அபிவிருத்தியும் உரிமையும் ரயில் தண்டவாளங்கள் போல சமாந்தரமாக இருக்க வேண்டும்

அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலின் போது தமிழ் சமூகத்தில் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்வதென்றால் உரிமைகளைப் பெறுவதற்காக களமிறங்கிப் போராடுபவர்கள்.

அதேபோன்று , அதேவேகத்தில் அபிவிருத்திக்காகவும் போராடக்கூடிய தகுதிகளைக் கொண்டவர்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையை இழந்திருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் உரிமைக்காகப் போராடி எந்தவித உரிமையையும் பெறவில்லை. அபிவிருத்தியையும் அடையவில்லை.

தற்போது அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் பிரதானமான 17 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.

இறைவனின் அருளால் எஞ்சியுள்ள ஒரு வருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது பிரதியமைச்சு பதவி தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்து காட்டுவேன் என்று சவாலுடன் தெரிவித்திருந்தார்.

Copyright © 9311 Mukadu · All rights reserved · designed by Speed IT net