தமிழர்கள் குழம்பத் தேவையில்லை! நினைத்ததை விரைவில் அடைவோம்!

தமிழர்கள் குழம்பத் தேவையில்லை! நினைத்ததை விரைவில் அடைவோம்!

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ் மக்கள் குழம்பத் தேவையில்லை. இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் அரசியல் நெருக்கடி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கை அரசியலில் பெரிய சதி நடவடிக்கை அரங்கேறியது. பதவியில் இருந்த பிரதமர் திடீரென நீக்கப்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

புதிய அரசுக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாததையடுத்து அதைச் சமாளிக்கும் வகையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், புதிய அரசின் இலக்கு நிறைவேறாதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் அரசமைப்புக்கு முரணாக – சட்டவிரோதமாக நாட்டின் அதியுயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டவையாகும்.

இந்தச் சர்வாதிகார – சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்துக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போது நாட்டில் பிரதமர் இல்லை; அமைச்சரவை இல்லை. ஏன் அரசுகூட இல்லை.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது. எந்தச் சலுகைகளுக்கும் நாம் அடிபணியமாட்டோம். குறுக்கு வழியில் – சதி நடவடிக்கை மூலம் – மக்களின் ஆணைக்கு மாறாக ஆட்சிக்கு வருபவர்களை நாம் ஆதரிக்கமாட்டோம். இதனை நாம் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டோம்.

நாட்டின் நற்பெயரைக் கருதி – நாட்டு மக்களின் நலனைக் கருதி கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியை மீளக்கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாம் கடிதம் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும் நபரை ஆதரிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.

ஜனாதிபதியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிமன்றங்கள் விரைவில் நீதியான தீர்ப்பை வழங்கும். அந்தத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார். ஏனெனில், அவரால் இனிமேல் ஒன்றும் செய்யவே முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க ஜனாதிபதி அனுமதித்தே தீரவேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் மீண்டும் அமையும் அரசிடம் எமது மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நாம் முன்வைப்போம். இராஜதந்திர ரீதியில் எமது உரிமைகளை – இலக்குகளை வென்றே தீருவோம். எமது மக்கள் குழம்பாமல் இருக்கவேண்டும்” – என்றார்.

Copyright © 6637 Mukadu · All rights reserved · designed by Speed IT net