நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலையக இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டில், இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவண்ணம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சியில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுத்த பொழுது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறையை இல்லாதொழித்து சாதாரண ஜனாதிபதியாக மக்களின் நன்மதிப்பை பெறுவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி இன்று அவரின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாட்டில் அரசியல் நிலைமை ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் அமைச்சரவை மற்றும் பிரதமர் இல்லை. எனவே இதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







