9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான!

9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான!

ஒன்பது வயதுடைய நெல்லையைச் சேர்ந்த பிரிஷா என்ற சிறுமி யோகாவில் 14 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இதனை கௌரவிக்கும் வகையில் குறித்த சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தச் சிறுமியின் பாட்டி ரவிசந்திரிகா. இவர், பிரிஷாவுக்கு ஒரு வயதாக இருந்தபோதிலிருந்தே யோகாசனம் கற்றுக்கொடுத்துவருகிறார்.

பிரிஷாவின் தாயார் தேவிபிரியாவும் யோகா செய்வதால் அவரும் இவருக்கு உதவிசெய்துவந்தார்.

இதனால் இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கும் அதிகமான விருதுகளையும, சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

ஆசனத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர்களாலேயே செய்வதற்குச் சிரமப்படும் மிகவும் சவாலான ‘கண்ட பேருண்டா’ என்ற ஆசனத்தை வேகமாகச் செய்வதில் பிரிஷா திறமையானவர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ‘கண்ட பேருண்டா’ ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து உலக சாதனை படைத்தார்.

அதேபோல் 2017 டிசம்பரில் ‘ஏசியா புக் ஒஃப் ரெக்கோர்ட்’ சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தார்.

மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

இவ்வாறு ஒன்பது வயதிற்குள் 14 உலக சாதனையை யோகாவிலும் நீச்சலிலும் படைத்துள்ளார் பிரிஷா. மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவில் என 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

Copyright © 1451 Mukadu · All rights reserved · designed by Speed IT net