சட்டவிரோதமாக உறவினரின் மதிலை அமைக்க சொன்ன சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்!

சட்டவிரோதமாக உறவினரின் மதிலை அமைக்க சொன்ன சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்!

சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது உறவினரது மதிலை சட்டவிரோதமாக அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

நகரசபையில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான ப.ஜெயக்காந்தன் தனது வட்டாரத்தில் வசிக்கின்ற தனது குடும்ப உறவினரின் எல்லை மதிலை நகராட்சி மன்றத்தின் கட்டட அனுமதியைப் பெறமாமல் கட்ட அனுமதித்ததாலேயே சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவது,

நகரின் 7ஆம் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டு வளவின் எல்லைச்சுவர் அமைப்பதற்கான விண்ணப்பத்தினை செய்திருந்தார்.

இந்த கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பத்தினை பரிசீலித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் எல்லைச்சுவர் அமையவுள்ள பகுதியையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போதே குறித்த கட்டட விண்ணப்பதாரிக்கும் அயல் குடியிருப்பாளருக்கும் எல்லைப் பிணக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி குறித்த எல்லையை அடையாளப்படுத்துவதற்குரிய வேலிக்கதியால்கள் முற்றுமுழுதாக அகற்றப்பட்டதோடு எல்லைச்சுவருக்கான அத்திவாரமும் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக எல்லைச்சுவர் அமைப்பதென்றால் அயல் குடியிருப்பாளரின் அனுமதியும் அவசியம்.

அதுமட்டுமின்றி சபை அமைவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அனுமதியின்றி மதிலுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்ட போதுதான் அயல்குடியிருப்பாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருதரப்பும் சமரசத்திற்கு வராமையினால் நீதிமன்றத்தினை நாடி எல்லைப்பிணக்கினை தீர்க்குமாறும், அதற்கு பின்னரே எல்லைச்சுவர் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்று நகராட்டி மன்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரால் உரிய தரப்பிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த உறுப்பினர் மதிலை அமைக்குமாறும் வருகின்ற பிரச்சினைகளை தான் சமாளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து மதில் அமைக்க முற்பட்ட போது அயல் குடியிருப்பாளரான பெண்மணி அழுதவாறு தவிசாளரிடம் முறையிட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட தவிசாளர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மூலம் சட்டவிரோத மதில் அமைப்பை நிறுத்தியதோடு சட்டநடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சபையின் மாதாந்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது குறித்த உறுப்பினர் சபையின் மரபுகளையும் ஒழுக்க விதிகளையும் மீறி ரீசேட் அணிந்து சபைக்குள் நுழைந்துள்ளார்.

இதையடுத்து ஏன் ரீசேட் அணிந்து சபைக்கு வந்தீர்கள் என தவிசாளர் வினவியபோது குறித்த மதிலை அமைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து வருவதாகவும் உண்மையை சபையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சபையின் உபதலைவர் அ.பாலமயூரன் உறுப்பினர்கள் சபையின் மதிப்புணர்ந்து ஒழுக்கமான ஆடைகளுடன் வரவேண்டும் எனவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பார்க்க வேண்டிய வேலைகளை உறுப்பினர்கள் செய்ய வேண்டியதில்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் குறித்த உறுப்பினரான ப.ஜெயக்காந்தன் கரைச்சி பிரதேச சபையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net