சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடுவதில்லை!

 

சாவகச்சேரி பொதுச்சந்தையை வாடகைக்கு விடுவது தொடர்பாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த சிறப்பு அமர்வில், சந்தையை குத்தகைக்கு வழங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இது குறித்து ஆராயும் சிறப்பு கூட்டம் நடந்தது.

இதன்போது, குத்தகைக்கு விடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. தமிழ் அரசுக்கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தனர்.

சந்தையை குத்தகைக்கு வழங்க கூடாதென ஏனைய 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து, சந்தையை குத்தகைக்கு வழங்குவதில்லையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குத்தகைக்கான கேள்வி அறிவித்தல் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளதால், அது குறித்து உரிய அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

சந்தையை வெளியாருக்கு குத்தகைக்கு கொடுக்க வேண்டாமென சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Copyright © 0473 Mukadu · All rights reserved · designed by Speed IT net