உலகத் தலைவர்கள் வரிசையில் விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் .

DSC2_CI
இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனுக்கு இருக்கின்றது. என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின கீழ், தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு நேற்று (15.06.2016) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பதாக பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். அவருடன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இன்று இந்த தேசிய நிகழ்வு இங்கு நடைபெறுவதற்கான காரணம் 30 வருட கால யுத்தத்தின் பின்பு வட மாகாணத்தில் தேசிய கல்வி நிகழ்வுகள் இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே இங்கு இதனை ஏற்பாடுசெய்துள்ளோம். இனி வரும் காலங்களில் கல்வி அமைச்சில் நடைபெறுகின்ற தேசிய நிகழ்வுகள் எல்லாமே இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக நடைபெறும்.

வட மாகாணத்தை பொறுத்த வரையில் முதற்கட்டமாக 644 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.அதற்காக 4130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏ.பி.சீ.டி ஆகிய நான்கு வரையறைக்குட்பட்ட பாடசாலைகள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பாடசாலையும், மன்னார் மாவட்டத்தில் 97 பாடசாலையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 129 பாடசாலைகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 279 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அகில இலங்கை ரீதியில் தமிழ் சிங்கள மொழி மூலமாக முதற்கட்டமாக 7000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் கொழும்பு போன்ற நகரங்களில் இருக்கின்ற பாடசாலைகளில் இருக்கின்ற அதே வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே. மேலும் பாடசாலையில் குறைபாடுகள் நிலவுமாக இருந்தால் மாணவர்களுக்கு கல்வியை சரியாக கற்க முடியாது. எனவே அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது.

வட மாகாணத்தை பொறுத்த வரையில் மாகாண கல்வி அமைச்சிற்கு இருக்கின்ற பாரிய பிரச்சினை. இங்கு கடமைபுரிகின்ற தொண்டர் ஆசிரியர்களின் நியமனமாகும். அதற்கு தற்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கான நியமனம் மிக விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே அவர்களின் நியமனங்களின் பின்பு இன்னும் வட மாகாணம் கல்வித்துறையில் வேகமாக முன்னேற்றமடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © 8794 Mukadu · All rights reserved · designed by Speed IT net