யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ் வெடிபொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்ட வல்லை வீதியிலுள்ள நெசவு தொழிற்சாலையொன்றிற்கு பின்புறமாகவுள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே இன்றைய தினம் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று குறித்த பகுதியில் உள்ள குறித்த தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருந்ததை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கிணற்றுக்குள் இருக்கும் வெடிபொருட்களை மீட்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் இவற்றை மீட்கும் பணியியை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி கிணற்றுக்குள் இருந்த முழு வெடிபொருட்களும் நேற்றுமாலை நான்கு மணியளவில் கிணற்றுக்குள் இருந்து வெளியெடுக்கப்பட்டன.
இந்நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எரிகனைகளும், 25மோட்டார் பரா எறிகனைகளும், 69 கிரணைட் வகை கைக்குண்டுகளும் அடங்குவதாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் மீட்கப்பட்ட வெடிபொருட்களை இன்றைய தினம் ஆழிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் முன்னர் இராணுவ முகாம்கள் இருந்ததுடன் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.