புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிப்பு.

punkuduthivu_1
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்து உள்ளனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மாணவி கொலை வழக்கு தொடர்பில் இதுவரை காலமும் தம்மால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேக நபர்களால் நீதிமன்றில் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களின் பிரதிகளை தருமாறு மன்றில் கோரினார்கள்.

அதற்கு பதிலளித்த நீதவான் சந்தேக நபர்கள் நீதிமன்றில் வழங்கிய வாக்கு மூலங்கள் அணைந்தும் ‘சீல் ‘ பண்ணப்பட்டு உள்ளன. அதனால் அவற்றின் பிரதிகளை தர முடியாது. இந்த வழங்கினை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்திய பின்னரோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாகவோ கோருமாறு நீதவான் தெரிவித்தார்.

இதேவேளை சந்தேக நபர்கள் மரபணு பரிசோதனை அறிக்கை முடிவுகள் தொடர்பில் தெரியபடுத்துமாறு மன்றில் கோரினார்கள் அதற்கு பதிலளித்த நீதவான் மரபணு பரிசோதனை அறிக்கை தொடர்பிலான முடிவுகள் அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த வழக்கு தவணையின் போது மாணவி வசித்த கிராம சேவையாளர் பிரிவில் மாணவி படுகொலை செய்யப்பட முன்னர் வசித்த குடும்பங்கள் தொடர்பிலும் தற்போது வசிக்கும் குடும்பங்கள் தொடர்பிலுமான விபரங்களை மன்றில் சமர்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பணிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்றைய தினம் மாணவி வசித்த கிராம சேவையாளர் பிரிவான புங்குடுதீவு தென் மேற்கு கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளர் செல்லத்துரை சிவா மன்றில் முன்னிலை ஆகி தனது கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பித்தார்.

அதில் மாணவி படுகொலை செய்யப்பட முன்னர் 30 குடும்பங்கள் வசித்ததாகவும், தற்போது 31 குடும்பங்கள் வசிக்கின்றன எனவும், அதிகரித்த ஒரு குடும்பமும், அங்கு வசித்த இளைஞர் ஒருவர் திருமணம் முடிந்து தனி குடும்பமாக பதிந்ததால் அதிகரித்தது எனவும் மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, வழக்கினை எதிர்வரும் 26ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அதுவரையில் 12 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net