அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை.
இம்முறை “பான் கீ மூனின் றுவாண்டா” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தின் கிழக்குப் பதிப்பகம் வழியாக வெளிவந்த பின்னர் அதை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ முக்கிய காரணமே அந்தத் தலைப்புத் தான். பின்னர் இந்தச் சிறுகதைகளை வாசிக்க முன்னர் ஆர். அபிலாஷ் வழங்கிய கச்சிதமான முன்னுரை தான் அகரமுதல்வனின் எழுத்தின் நிறத்தைக் காட்டியது. சொல்லப் போனால் இந்தச் சிறுகதைத் தொகுதியை முழு மூச்சில் வாசித்து முடிப்பதற்கும் ஆர்.அபிலாஷின் சிறப்பானதொரு பகிர்வே காரணியாயிற்று.

ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை முற்போக்கு எழுத்தாளர் காலத்தில் இருந்து வாசித்து வருபவன். 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட “விண்ணும் மண்ணும்” என்னும் சிறுகதைத்தொகுதி யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் உள்ளிட்ட மாணவர்களின் சிறுகதைகளால் நிரம்பியிருந்தது. பின்னாளில் ஈழத்துச் சிறுகதை, நாவல் உலகின் முக்கிய ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகவும் ஆயினர். இந்த இடத்தில் இவர்களைக் குறிப்பிடக் காரணம். இவர்களின் வயதை ஒத்த அல்லது நான்கைந்து வயது மூத்த பருவத்தினரான அகரமுதல்வனின் எழுத்துகளை அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்தச் சிறுகதைத் தொகுதி உதவியது. இருபத்தைந்து வயதாகியிருக்கும் அகர முதல்வனின் எழுத்து, களம் எல்லாமே இன்னும் பத்துப் பதினைந்து வயது மூத்த அனுபவ வெளிப்பாடாகவே எண்ண வைத்தது.

“பான் கீ மூனின் றுவாண்டா” என்ற தலைப்புள் புதைந்திருக்கும் போரியல் வாழ்வின் துயர் தோய்ந்த வடுக்கள் தான் ஒவ்வொரு சிறுகதைகளின் பின்புலமாக அமைந்திருக்கின்றன. ஆகவே இவற்றைப் போரின் முகங்களாகக் கூடக் கதை மாந்தர் வழியே நிறுவ முடியும். எழுதப்பட்டிருக்கும் பத்துச் சிறுகதைளில் தொண்ணூற்றைந்துக்குப் பின்னான ஈழத்துப் போரியல் வாழ்வு, குறிப்பாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் வழியே காட்டப்படுகிறது அல்லது ஏதோவொருவகையில் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் எல்லாமே வெவ்வேறு அவலச் சுவையையைக் காட்டும் பன்முக வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. தீபாவளி என்ற சிறுகதையின் பின்புலம் இந்திய அமைதிப்படைக்காலத்து அட்டூழியம் என்றாலும் அது
இரண்டாயிரங்களின் நிகழ் உலகிலேயே மீட்டுப்பார்க்கப்படுகிறது.
பொதுவாகச் சிறுகதைத் தொகுதி மரபில் குறித்த சிறுகதையொன்றே அத் தொகுதியின் தலைப்பாக அமைந்திருக்கும். இங்கே அந்தத் தலைப்பு எல்லாச் சிறுகதைகளையும் கிளையாகக் கொண்ட மூல வேராக இருக்கிறது.

பேச்சு வழக்கு என்பது ஈழத்துச் சிறுகதை உலகில் இரண்டு தளங்களில் நிறுவப்பட்டிருக்கிறது. ஒன்று ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களின் அந்தந்த இடத்துப் பேச்சு வழக்கிலேயே எழுதப்படுவது. இன்னொன்று பொதுவான தமிழ் நடையை மூல எழுத்தாகவும் உரையாடலைப் பேச்சு மொழியாகவும் தருவித்தல். இங்கே ஈழத்துச் சினிமா என்று சொல்லித் தமிழக மொழியாடலைப் போட்டுக் குழப்பும் காரியம் நல்ல வேளை ஈழத்துச் சிறுகதை உலகில் இதுவரை நிகழவில்லை என்பதையும் நிம்மதியோடு பதிவு செய்யலாம். அகரமுதல்வன் தேர்ந்தெடுத்தது இன்னொன்றாகக் குறிப்பிட்ட அந்தப் பொது மொழி. அதனால் ஈழத்து வாசகப் பரப்பைத் தாண்டி இந்த எழுத்துகளினூடு நேரடி நுகர்வு அனுபவத்தை வாசகனுக்குக் கொடுக்க வாய்ப்புள்ளதாகியிருக்கிறது.

ஈழத்து இலக்கியப் பரப்பில் எஸ்.பொ, சே.யோகநாதன் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்கள் விலத்தி மற்றோர் படைப்புகளில் காமம் அது சார்ந்த உணர்வின் எழுத்தோட்டம் இலை மறை காயாகவே பதியப்பட்டிருக்கும். அகரமுதல்வன் இந்த இடத்தில் கட்டுடைப்பு செய்கிறார். இந்தச் சிறுகதைத் தொகுதியில் உடல் இச்சை சார்ந்த விபரிப்புகளில் அது கரைபுரண்டோடுகிறது. அங்கே எழும் வர்ணனைகள் கூட ஒரு சிறுகதையாளனிடமிருந்து அழகியலை நுகரும் கவிதைக்காரானாக மாறுகிறு.

ஈழத்துப் போர்க்காலத்தைப் பற்றி எழுத வரும் போது சார்பு நிலை தவிர்க்க முடியாதது. அது
களத்தில் தமிழரின் முக்கிய படையணியாக இயங்கிய விடுதலைப்புலிகளின் எண்ணக்கருத்துகளை மீள நிறுவுவனவாகவோ அல்லது அதற்கு முற்றிலும் நேர்மாறான விமர்சனப் பார்வையிலோ, இல்லாவிடில் இவை இரண்டும் தவிர்ந்த மதில் மேல் பூனைகளான இரண்டும் கெட்டான்களாகவோ அமைய முடியவதை வாசகப்பரப்பில் நின்று பார்க்கிறோம்.
அகரமுதல்வனின் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மையவோட்டத்தை ஆதரிக்கும் வண்ணமே இருப்பதை ஒவ்வொரு கதைகளின் வழியே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் புலிகளை விமர்சிக்கத் தூண்டும் களமோ, கதை மாந்தரோ அமையும் போது அந்த இடத்தில் நின்று புலிகளின் கோட்பாட்டை மீள நிறுவி விட்டே போகிறார். இங்கே புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிக் காட்டிக் கொடுத்தவனையும், ஆமிக்காறருக்கு விசுவாசியாக மாறிப் போனவர்களையும் காறி உமிழுமாற் போல அந்தந்தத இடங்களில் வைத்துத் தண்டிக்கிறார். எனவே அகரமுதல்வனது இந்தச் சிறுகதைகளில் காமம் தாண்டிய நேரடியான போர்க்காலத்துக் கதைகள் ஒரு போராளிப் பார்வையோடே எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்தச் சிறுகதைகளின் பொதுத்தன்மையிலொன்று, ஏதாவதொரு பாத்திரமோ அல்லது கதை சொல்லியோ பகிரும் சுய வாக்குமூலமான பாங்கிலேயே சிறுகதை நடை எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் பொது விமர்சனத்தைக் கூடச் சுதந்திரமாக ஒரு சிறுகதை வழியே முன் வைக்கக் கூடிய வழி கை கூடுகிறது.

“சங்கிலியன் படை”என்ற சிறுகதையே இந்தத் தொகுப்பின் உச்சமான படைப்பாகச் சிலாகிப்பேன். அபாரமானதொரு நடையில் வாசகனைப் போக்குக் காட்டிக் கதையை முடிவிடத்துக்கு நகர்த்தும் விதம் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் நிலவிய சமூகச் சீரழிவுகளின் காரணகர்த்தாக்கள், இராணுவ ஒத்தோடிகள் மீதான களையெடுப்பு சங்கிலியன் படை வசம் வந்த போது நிகழுமாற் போல அமைந்திருக்கும் அந்தச் சிறுகதையைப் புனைகதையாகக் கடந்து விட முடியாதளவு மெய்த்தன்மை கொண்ட நிகழ்வின் பரிமாணம் அது. வாசித்துப் பல மணி நேரம் கடந்தும் அந்தச் சிறுகதையின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை.

ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை காலத்தைச் சந்தித்தோருக்கு ஒவ்வொரு தீபாவளியும் 1987 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் இந்தியன் ஆர்மி நிகழ்த்திய கோரத்தாண்டவம் ஞாபகமூட்டத் தவறாது. அந்த நிகழ்வுக்குள் தான் சிருஷ்டித்த பாத்திரங்களை உலாவ விட்டு எழுதப்பட்டதே “தீபாவளி”. இந்தியா மீதும் குறிப்பாக இந்திரா மீதும் ஈழத்தமிழர்கள் கொண்டிருந்த பேரன்பும், நேசமும் கண்டு வளர்ந்தவன் என்பதால் கதை முடியும் போது எழுத்தாளர் கதிர்காமன் என்ற மூலப் பாத்திரம் வழியே சுட்டும் கருத்து சுடுகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் மற்றைய கதைகளை விட வலுவிழந்த ஓட்டமாகவே எனக்கு இந்தச் சிறுகதை வாசிப்பு அனுபவம்.

“பெயர்” என்ற சிறுகதை முதலாவதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. நாடிழந்த இரண்டு அகதிகளின் பாலியல் இச்சை வழியே நகரும் கதையின் முடிவிடம் வரை இன்னார் என்ற பெயர் வராது. தம் அடையாளத்துக்கான தேடலாகப் போய்க் கொண்டிருக்கும். ஒப்பீட்டளவில் மற்றைய சிறுகதைகளை விட இந்தச் சிறுகதை ஒரு புதுமையான நுகர்வனுபவம், எடுத்த எடுப்பிலேயே இதை வைத்திருக்கக் கூடாது என்பேன்.

சிறுகதைகளின் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஒவ்வொன்றையும் ஆரம்பிக்கும் விதம் கூட மரபு சாராது திசைக்கொன்றான பயணமாகவே இருக்கின்றன. இந்தக் கதையை நீங்கள் வாசித்து முடிக்கப் பத்து நிமிடங்கள் ஆகும் என்றெல்லாம் புதுமையான உத்தியைக் கையாள்கிறார்.

இறுக்கமான கதைப் போக்கிலிருந்து மெல்ல இயல்பாக்கி “கள்ளு” ஆங்காங்கே நகையூட்டி அங்கேயும் இன்னொரு வலியைப் பகிர்கிறது. சாதாரண வாழ்வியலைக் கதைக் கருவாகக் கொண்டாலும் அது சுற்றிய போர்க்கால வாழ்வியலால் அசாதாரணமாக எடுத்துச் செல்லப்படுகிறது. “கள்ளு” போலவே “முயல் சுருக்கு கண்கள்”, “இவன்”ஆகியவையும் இதன் பொது உதாரணங்கள்.

“முயல் சுருக்கு கண்கள்” இல் வன்னிக்காட்டுக்குள் வேட்டை வழியாக அந்தக் கள விபரணம் வெகு அழகாக நெய்யப்பட்டிருக்கிறது.

அக நானூறு போன்ற சங்க இலக்கிய மரபில் வீரஞ் செறிந்தோனின் காதலையும், அவன் மனைவியாளவள் எதிர் கொள்ளும் பிரிவுத்துயரையும் மையப்படுத்தி அந்தக் காலகட்டத்துச் சூழலை வைத்தும் நவீன இலக்கியங்கள் கவிதை நடையிலும், சிறுகதையாகவும் தமிழில் எழுந்திருக்கின்றன. இங்கே “தாழம்பூ”அவ்விதமே எழுதப்பட வேண்டுமென்ற உள்ளுணர்வு இருந்திருக்கலாம். அதனாலோ என்னவோ போராளி தன் மனைவிக்கு எழுதும் கடிதம் கூட அந்நியப்பட்டு இலக்கிய நெடி அடிக்கிறது, அகரமுதல்வனின் எழுத்தாற்றலில் இந்தச் சிறுகதையும் சுமாரானதொரு பங்களிப்பையே கொடுத்திருக்கிறது.

“தந்தம்” சிறுகதை இறுதிக்கட்டப் போரின் வழியாக எழுந்த கோடரிக்கம்புகளை அடையாளம் காட்டும் ஒரு சோறு. குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார் கதை இரண்டு வெவ்வேறு களங்களில் நகருமாற் போல இறுதிக்கட்ட யுத்த காலத்தையே பேசுகிறது.
கரை சேராத மகள் கதைப்புலம் கூட யதார்த்த வாழ்வில் இந்திய இராணுவம் காலம் தொட்டுச் சந்தித்த, இராணுவ முகாமுக்கு அருகிலான வாழ்க்கையும் சம நேரத்தில் போராளிகளை ஆதரிக்கும் பண்பையும் மீள இந்த உலகத்தில் காட்டுகிறது.

கதை மாந்தருக்குள் அன்ரன் பாலசிங்கம், கேணல் தீபன், விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி ஆகிய இயக்கக்காரும் கதைகளில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எடுத்தாளப்படுகிறார்கள். அது கற்பனை இலக்கணம் கடந்து குறித்த சிறுகதைகளை நிகழ் சம்பவ உலகுக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது. ஆகையால் கதைகளாகக் கடந்து போக முடியாமல் எங்கேனும் நிகழ்ந்ததாய் இருக்கும் என்ற மெய்த்தன்மையும் சேர்கிறது.

இந்த சிறுகதைகளை ஒன்று திரட்டி ஒரு நாவலாகக் கூட அணுகக் கூடிய அளவுக்கு சம்பவங்கள், களங்கள், காலங்கள் பொதுவாக வந்தமைகின்றன.
அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” வழி ஈழத்துப் போரியல் வாழ்வின் வலியை நேரே அனுபவிக்க முடிகிறது. அதனால் இந்தச் சிறுகதைத் தொகுதியை முக்கியமான ஈழத்து வாழ்வியல் வரலாற்று ஆவணமாகவும் நோக்க முடியும்.

கானா பிரபா
18.02.2018

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net