7 பேரை விடுவிப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை!

7 பேரை விடுவிப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றே அந்த தீர்மானத்தை ஆளுநருக்கும் அனுப்பினது.

ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால் அவர்களின் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது.

விடுதலைக் குறித்த தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பு அதனை மறுத்தது.

ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த இருவரின் உறவினர்கள், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான, விசாரணைகள் நடைபெற்று வருவதால், தீர்ப்பு வரும் வரையில், தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 15 பேரின் உறவினர்கள் அண்மையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு கோரி மனுவொன்றையும் கையளித்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அளுநர் மாளிகை உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Copyright © 4369 Mukadu · All rights reserved · designed by Speed IT net