தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து தப்பும் நிலை!

தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து தப்பும் நிலை! கேசவன் சயந்தன்

வட மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், செயற்திறனின்மை, போன்றவற்றை பல எதிர்ப்புக்கள் மத்தியில் நாங்கள் வெளிக் கொண்டு வருகின்றபோது அதனை முடிமறைப்பதற்காக தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்தார்

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் ஒருவரின் முறைகேடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையில் ஊழல் மோசடிகள் மற்றும் செயற்திறனின்மை போன்ற விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகின்றோம்.

அதனை நாங்கள் வெளிப்படுத்துகின்ற போது பலத்த எதிர்ப்புக்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டியே நாங்கள் அதனைச் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.

அவ்வாறு நாங்கள் அவற்றை வெளிப்படுத்துகின்ற போது அதனை மறைப்பதற்காக கையிலெடுக்கும் ஆயுதம் தான் தேசியம். மேலும் அதனை வெளிப்படுத்துகின்றபோது அவரைப் பழிவாங்க, இவரை பழிவாங்க நாங்கள் செய்தோம் என்றும் எம் மீது பலத்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனாலும் நாங்கள் அவற்றை வெளிப்படுத்தகின்ற போது தேசியத்தையே கையிலெடுக்கின்றனர். இப்ப குடும்ப வன்முறைகளுக்கும் தேசியமே பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் தமிழ்த் தேசியம் புனிதமானது. ஆனால் போலித் தேசிய வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் சிக்கி அதனை மக்களே வெறுக்கும் நிலையே ஏற்படுத்தப்படுகின்றது என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net