கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால ஏற்பாடுகள் தொடர்பாக உயர் மட்டக்கலந்துரையாடல் (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதி மார்ச் மாதம் நடத்துவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை கடந்த வருடங்களை போல் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இம்முறை இந்தியாவில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்ககள் இளைப்பாறுவதற்கு நிழல் கூடராங்கள் 70, மற்றும் குடிநீர் தாங்கிகள் 150, மலசலகூட வசதிகள் என்பன கடற்படையினர், மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தர்களுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியவகையில் இதர செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் படகு சேவைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net