தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்!

தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய நிலங்களை பெரும்பான்மையினத்தவருக்கு தாரைவாா்க்க சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’ அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்து கருத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வேலாயுத பிள்ளை பஞ்சலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான தனது ஆலோசனை என்ற பெயரில் சீ.வி.விக்னேஸ்வரன், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

அந்த ஆலோசனைகளாவன, அம்பாறை தோ்தல் தொகுதியை ஊவா மாகாணத்துடன் இணைத்தல், திருகோணமலை கோமரன்கடவை பிரதேசத்தை வடமத்திய மாகாணத்துடன் இணைத்தல், புத்தளம் பிரதேசத்தை மன்னாா் மாவட்டத்துடன் இணைத்தல், ஆகியனவை அவருடைய யோசனையாகும்.

ஆனால், இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் வட,கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்ல, இலங்கையில் ஏனைய இடங்களிலுள்ள தமிழ் மக்களும் தமது இருப்பை இழப்பதுடன், 3 ஆம் தர பிரஜைகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு தமிழா்களின் அடிச்சுவடு தெரியாமல் அழிக்கும் நோக்கிலேயே விக்னேஸ்வரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் திருகோணமலை, கேமரன் கடவை தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த நிலம், அங்கு பிரதேச சபை தவிசாளராக இருந்தவா் நடராஜா என்ற தமிழா்.

அவா் பதவியில் இருக்கும்போது பெரும்பான்மையினத்தவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்கானார். அதன்பின்னர் அங்கிருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டனா்.

இவ்வாறு முன்னாள் முதலமைச்சா் கூறிய எல்லா யோசனைகளிலும் தமிழ் மக்களுடைய பூா்வீக வாழ் நிலங்கள் அபகரிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் 1948ஆம் ஆண்டுக்கு முன்னா் இருந்த வட,கிழக்கை கேட்டுக் கொண்டிருக்கின்றாா்கள். அதற்காக எத்தனையோ இழப்புக்கள், உயிா் அழிவுகளுக்கு பின்னரும் தமிழ் மக்கள் நிலத்தை கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றாா்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ் தாய்க்கு பிறந்தவா்கள், தமிழ் மீதும் பற்றுள்ளவா்கள் இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருக்க மாட்டாா்கள்.

எனவே, முதலமைச்சருடைய கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் அதிலிருந்து வெளியே வாருங்கள். இல்லையேல் எல்லோரும் துரோகி பட்டத்தை சுமப்பீா்கள்” என வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

Copyright © 8280 Mukadu · All rights reserved · designed by Speed IT net