முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம் நோக்கி நகர முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்த சட்டம் யுத்தம் முடிந்தும் நீக்கப்படாமல் அமுலில் இருக்கின்றது.

இவ்விடயம் காலங்காலமாக தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும். இலங்கை சுதந்திரம் அடைந்த நாள்தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்பு செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன.

இந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தம். இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கி பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள்.

இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சி கட்டமைப்பினையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது.

ஆதலால் வரலாற்றில் இருந்து நாம் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கூட தூரநோக்கின்றி செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளால் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை தமிழ் இனத்தின் துர்ப்பாக்கிய நிலையே ஆகும்” எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 3311 Mukadu · All rights reserved · designed by Speed IT net