அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்!

அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்!

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துடன் வரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துப்பார்க்கும்போது, புதிய அரசமைப்பை உருவாக்க இவர்கள் ஒரு புள்ளியில் ஒன்றிணைவார்கள் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? என எமது செய்தியாளரினால் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் சொன்னது, இந்த முயற்சி தோல்வியடையுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார்.

ஒக்டோபர் புரட்சியின்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒருவரும் நீதிமன்றம் போயிருக்காவிட்டால் அது தோல்வியடைந்துவிட்டது என்று நான் கருதியிருக்கமாட்டேன்.

இந்த முயற்சி தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் நான் அதில் ஈடுபடுவேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துதான் அதில் ஈடுபடவேண்டும் என்றும் இல்லை.

நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை வழிநடத்தல் குழுவில் அவர்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பது அனைவரதும் ஏகமனதான தீர்மானம்.

வழிநடத்தல் குழுவில் உள்ள எவரும் இதனை எதிர்க்கவில்லை. இடைக்கால அறிக்கையை அனைவரும் சேர்ந்து தயாரித்திருந்தார்கள்.

அது வெளிவருகின்றபோதுதான் எங்கள் நிலைப்பாட்டையும் காட்டவேண்டும் என்று ஒவ்வொருவரும் இணைத்துக்கொண்டார்கள்.

அது தவிர இது பேசி இணக்கப்பாட்டுக்கு வந்த விடயம். இந்த அரசமைப்பு விடயத்தில் நாங்கள் மூடிய அறைக்குள் பல கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் பேசி ஏதோ ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருந்திருக்கிறது.

ஆனால் அப்படியான இணக்கப்பாட்டுக்கு வந்த விடயத்தை மக்களிடத்தில் சொல்லுவதற்கான அரசியல் துணிவை இன்னமும் அவர்களிடம் நான் காணவில்லை.

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று நாங்கள் நம்புகின்றோம். பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் நிலைப்பாடுகள், இருப்புகள், பாதுகாக்கவேண்டியவைகள் எல்லாம் இருக்கும்.

இது அரசியல். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நாட்டுக்காக இதனைச் செய்துமுடிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு வரும்.

52 நாள்கள் புரட்சி வந்தபோது எல்லாருமே சொல்லிவிட்டார்கள் இது முடிந்த கதை, புதிய அரசமைப்பு நகர்வே இனிக் கிடையாது என்று எல்லாம் கூறினார்கள். இந்த அறிக்கை வராது என்று எல்லாருமே முடிவு கட்டிவிட்டார்கள். ஆனால் இது வந்திருகின்றது.

நம்பிக்கை அத்தியாவசியம். எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். நாங்கள் கையைக் கட்டிக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்கப்போவதில்லை. இதைச் செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

புதிய அரசமைப்பு தேவை என்று மஹிந்த ராஜபக்‌ஷவே சொல்கிறார். ஆனால், தேர்தல் வருகின்றபடியால் இப்போது செய்யமுடியாது என்று அவர் கூறுகின்றார்.

ஏன் அவர் தேவை என்று சொல்கின்றார்? அவருடைய காலத்தில் புதிய அரசமைப்பு தேவை என்று அவர் ஒருநாளும் சொல்லவில்லை. பிரதமரும் புதிய அரசமைப்பு தேவை என்கிறார்.

ஏதோ ஒரு தருணத்தில் – வெகுவிரைவில் அனைத்துத் தரப்பும் இணங்கிப் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற ஒரு புள்ளிக்கு வருவார்கள்.

ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், திரும்ப அரசு மாற்றப்படும் என்று எவருக்கும் நம்பிக்கை இருந்திருக்கவில்லை.

ஆனால், அது மாற்றப்பட்டது. ஆகையால் சரியானதைச் செய்கின்றபோது அதற்கு அனைவரும் இணங்கி வரவேண்டிய கட்டாயத் தேவை உண்டு.

புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன.

தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net