இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை!

இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை!

மக்களின் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை, எனவே கேப்பாப்புலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேற வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கேப்பாப்புலவு போராட்ட மக்களுக்கும், சிறுவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று ஒரு தொகுதி உதவிகளை வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, கேப்பாப்புலவில் 709வது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவு பொருள்களையும் வழங்கி வைத்துள்ளார்.

அத்துடன் கேப்பாப்புலவில் போராட்ட மக்களைச் சந்தித்த அவர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்பில் மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது, கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 709 நாள்கள் போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்கள், இந்த இடத்தில் இருந்து படையினர் களையவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்று கேள்வி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது விடயமாக வடமாகாண ஆளுநருடன் ஒரு கிழைமைக்கு முன்னர் பேசியதாகத் தெரிவித்த அவர், இது விடயம் குறித்து அவர் மத்தியஸ்தம் செய்வதாகவும் இராணுவத்தினருக்கு இன்னும் ஆறுமாத கால தவணை வேண்டும் என்றும் கேட்டார் எனவும் குறிப்பிட்டார்.

“அதற்கு, முன்னரும் தவணை கேட்டிருந்தார்கள் தவணையில் வடையமில்லை படையினர் முகாமினை விட்டு வெளியேற தொடங்குங்கள் அதன்பின்னர் காலம் தல்லாம் என்று நான் கூறினேன்” என்றார்.

“தவணை கேட்டுக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளதுடன், முதலில் படையினர் காணிகளை விட்டு போவதாக அறிக்கை தந்து முதலில் இரண்டு மூன்று லொறிகளில் ஏற்றுங்கள் அதற்கு பிறகு கால அவகாசம் கொடுக்கலாம என்று தெரிவித்துள்ளேன். இது பற்றி அவர்களுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேப்பாப்பிலவு மண்ணில் இருந்து படையினர் வெளியேறாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இங்கு இருக்கும் மக்களுக்கு அதற்குரிய உறுதி இல்லை என்று சொல்கின்றார்கள்.

இரண்டாவது போரின்போது இந்த இடங்களை படையினர் கைப்பற்றி இருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்து இருக்க உரித்து இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள். இவைகள் எல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாத கருத்துகள்.

படையினர் போரின்போது பலாத்காரமாக எடுத்த காணிகளை, அவர்களிடம் திருப்பி கொடுக்கவேண்டியது படையினரின் கடமை. மக்களிடம் உறுதி இல்லை என்று சொல்வதற்கு படையினருக்கு உரித்து இல்லை.

இந்தக் காணியை வடமாகாண காணி ஆணையாளரிடம் கொடுத்து யாருக்கு அந்தக் காணி போக வேண்டுமோ அவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லவேண்டுமே ஒழிய, உறுதி இல்லை என்று செல்லி போகாமல் இருப்பதற்கு உரித்து இல்லை” என்றும் குறிப்பிட்டார்.

“மற்றது, போரின்போது இந்தக் காணிகளை எடுத்தபடியால் அவர்களுக்குத் தொடர்ந்து இருக்கலாம் என்ற கருத்தை படையினர் வெளியிட்டுள்ளார்கள். வேறு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இந்த மக்கள் வரவில்லை.

போரின்போது அரசின் அதிகாரம் வடக்கில் இருந்தது. அரசு இருக்கும்போதுதான் போர் நடந்தது இன்னொரு நாட்டுக்கு சென்று காணியை எடுத்ததைப் போன்று, படையினர் காணியை எடுத்துக்கொள்வதற்கு சட்டத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லை. அது சட்டத்துக்கு பொருத்தமல்லாத கருத்து” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“மூன்றாவதாக ஒரு கருத்தையும் வைத்துள்ளார்கள், கேப்பாப்பிலவு மண் கேந்திரஸ்தானம். அதனால் இந்த இடத்தை விட்டு போகமுடியாது என்று சொல்கின்றார்கள். உண்மையில் மக்களின் காணிகளில் மரங்கள், வளங்களைப் பார்த்தால் அவர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள்.

கேந்திரஸ்தானம் என்றால், அதற்குக் காரணம் காட்ட வேண்டும். போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. கேந்திரஸ்தானத்துக்குரிய காரணங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அது நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்” எனவும் அவர் மேலும் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net