வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி பௌத்த மாநாடு!

வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி பௌத்த மாநாடு!

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மைத்திரியில் வடமாகாண ஆளுநரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள சிறீ போதிதக்ஸணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா சிறீ போதிதக்ஸணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுக் கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net