நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை-மெல்லிய காதல்களும் புதைந்த ஈழநிலம்.

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை-மெல்லிய காதல்களும் புதைந்த ஈழநிலம்.

இன்று காதலர் தினம்.  ஈழத்தின் பலவீதிகளில் இன்றைய தலைமுறை மன்மத பாணம் விட்டுக்கொண்டிருக்கின்றன.எவனோ ஒருவன் சொன்னதுபோல் எழுத்துப்பிழைவிட்டு எழுதிய புரட்சி வாசகங்களால் ஆன வலிமைமிக்க சுவரொட்டிகளும் கிறுக்கல்களும் அலங்கரித்த வரலாற்றை சுமந்த சுவர்களில் இன்று இதயங்கள் கீறப்பட்டு அம்புகள் பாய்ந்துகொண்டிருக்கின்றன.காதல் என்பது இனியும் என்றும் அழியாப்பேருணர்ச்சி.

அடி நெஞ்சில் பரபரத்திருக்கும் அந்த பருவத்துடிப்பை வார்த்தைகளுக்குள் வடிக்க முற்பட்ட வரலாற்றுத் தோல்வி இன்றைக்கும் தொடரும் இனியும் தொடரும்.காதலுணர்ச்சி வாழும் காலம் முழுக்க வந்து கொண்டேதான் இருக்கும்.காதலில் எக்கணமும் பூமிக்குள் ஒரு புத்துணர்ச்சி சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.

இனத்துக்கு இனம் காதலின் பிரவாகத்தை கொண்டாடும் விதம் வரலாற்றின் தனி அழகை சூடியே வந்துள்ளது.காதலினால் வடிக்கபட்ட கல்லறை வாசகங்கள் வரை கண்ணீரோடும் கூட அழியாக்காதல் எனும் தெய்வீகமும் தொடர்ந்து வருகின்றன.

காதலன் காதலிக்காகவும் காதலி காதலனுக்காகவும் என ஒரு காதல் பிரபஞ்சத்தை கட்டிவைத்துள்ளார்கள்.அந்த காதல் உங்களையும் என்னையும் கூட விட்டுவைத்தில்லை.அந்த உணர்ச்சி அற்ற மனிதன் ஆரோக்கியமற்றவன்.

அந்த உணர்ச்சியை அழகுற இந்த உலக்குக்கு விட்டுச்செல்பவனும் அற்புதப்பிறவியே.காதலை காலத்துக்கு காலம் அழகாக்கிவிட்டு பூமியின் மடியில் புல்லரிக்க தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் கோடி காதல் சித்தர்கள்.தமிழர்களின் காதல் மட்டும் என்ன குறைந்ததா.

போரும் காதலும் என்பது எங்கள் வாழ்கையின் வரலாற்று வாசகம்.வாளையும் ஈட்டியையும் எய்யும் வித்தை மட்டுமல்ல மடியில் சாய்ந்து தலைகோதி தழுவும் தாளாத இன்பக்காதலின் பேராறுக்கும் தமிழன் சொந்தக்காரன்.

காதலில் சைவம் ஒன்று அசைவம் ஒன்றென வகைகாணும் இன்றைய கவிஞனுக்கு கைக்கிளை பெருந்திணை அன்பின் ஐந்திணை என காதலில் திளைத்து வகுத்துப்பிரித்து பாவாக்கிய பிரம்மர்கள் எங்கள் முன்னவர்கள் என்பது பெருமைதான்.இன்றைய லிவிங் ரூ கெதரை பக்குவமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பெருந்திணையென பகுத்துவைத்தவன் நம்மாள்.
.
‘கண்டுஇ கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்றும் ‘பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி வால் எயிது ஊறிய நீர்’ என்றும் ‘காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது செய்வேன்கொல் விருந்து’ என்றும் ‘காலை அரும்பிப்பகல் எல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்’ என்றும் ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு’ என்றும் ‘ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு’ என்றும் ‘ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்’ என்றும் செம்புல பெயல் நீர் போலென்னும் அக்குவேறு ஆணிவேறாய் வடித்து விழியில் வழிந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என உறக்கமின்றி எங்களை பாடவைத்தது காதல்
.
‘காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’ என்றும் பாட்டுக் கலந்திடவே- அங்கே ஒரு பத்தினிப் பெண்வேணும்’ என்றும் ‘காதலை வேண்டிக் கரைகின்றேன்’ என்றும் ‘காதலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு’ என்றும் ‘காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர் உலகத் தீரே!’ என்ற காதல் குரலை எப்படி மறக்க

இப்படிப்பட்ட பெருங்காதலை தன் இன விடுதலைக்காக அர்ப்பணித்த காதலர்களை மண்ணுள் தாங்கி மௌனமாய் இன்று அழுகின்றது ஈழநிலம் அதன் காதல் முகாரி உங்கள் காதுகளில் கேட்கிறதா.வாய்விட்டு அழமுடியாமல் போரில் தன் சோடியை பிரிந்த ஒற்றைப்பறவையின் ஓலம் உங்கள் காதில் கேட்கிறதா நண்பர்களே.

எம் மண் இருள் சூழ்ந்த நாளில் சொல்லிப்பிரிந்த காதலர்களின் சொல்லாமல் பிரிந்த காதலர்களின் அரும்பிய காதலை சொல்லமுடியாத போருக்குள் அவன் ஓரு திக்கிலும் அவள் ஒரு திக்கிலும் தூக்கி எறியப்பட்டுவிட கருகிய அந்த கந்தர்வ மலர் முகிழை மறக்க முடியுமா.

வானில் ஆக்கிரமிப்பாளனின் விமானங்கள் ஊருக்குள் குண்டுகளை கொட்ட வந்தசேதியில் அவளின் உயிரும் பிரிந்ததாம் என்ற சேதியில் புரண்டழுது புளுதிகுளித்த காவியப்பாத்திரங்களைவைத்து கதை எழுதாமல் எங்கள் பேனாக்கள் பிறவி வரத்தை பெற்றுவிடத்தான் முடியுமா

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகுகாலம்
உறங்கி வெகுகாலம் நீ ஓடிவந்தால் போதும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்
ஒரு காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்

மீண்டும் ஈழத்தில் பிறந்த சங்க காலத்தின் செய்யுள் அது.காதலித்து வசந்தங்களை வாழ்ந்து முடிக்கவேண்டிய பருவத்தை தாய்நிலத்தை காக்கும் பயணத்தில் தாரைவார்த்துக்கொடுத்தனர்.ஒரு பெரும் இளமை பிரவாகங்கள்.

நெஞ்சோடு உள்ள காதலோடு கந்தகத்தை உடலில் சுமந்து ஒன்றுமில்லாமல் உயிரை உடலை வெடிக்கவைத்தனர் வியக்கவைக்கும் வீரயுகத்தின் பருவ வயதினர்.

ஒரு களமுனையில் காதலனும் இன்னொரு களமுனையில் காதலியுமாக காத்திருந்து இல்லற வாழ்வெனும் இனிமைக்குள் நுழையாமலே மண்ணுக்குள் விதைந்தவர்கள் ஈழத்தின் இணையற்ற துறவிகள்.

காதலன் உடலுக்கு மண் போட்டு விதைத்துவிட்டு அந்த அன்பையும் சுமந்துகொண்டு களமாடி வீழ்ந்த காரிகையரை கண்ணிலொற்றிக்கொள்ளலாம் காதலர் தினங்களில். ஈழத்தின் விண்ணின் மேல் இரவில் சிமிட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் பாதி காதல் நட்சத்திரங்கள்.தாய் நிலத்தை காத்த தங்க விண்மீன்கள்.

இறுதியாய் முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தில் காதலர்கள் காற்றுவாங்கியபடி கைகோர்த்து களித்திருக்கவேண்டிய தென்னந்தோப்புகளில் சுதந்திரபுரத்தில் தேவிபுரத்தில் காதலர்களை பிணங்களாக்கிக்கொண்டிருந்தது ஆக்கிரமிப்பாளர்களின் எறிகணைகள்.

காதலர்கள் காதல் புதைய நடந்து ஸ்பரிசிக்க வேண்டிய நந்திக்கடற்கரை மணலில் காதலர்கள் இரத்தம் சொட்டச்சொட்ட உயிர்பிரிந்துகொண்டிருந்தார்கள்.

காதலர்கள் உலவும் பாலியாறு தொட்டு கனகராயன் ஈறாக இரணைமடுவின் உடையார்கட்டின் நிதிக்கரைகளில் மட்டக்களப்பில் வாவியோரத்தில் குண்டுகள் தாங்கி ஈழத்தின் காதலர்கள் வீழ்ந்துகொண்டிருந்தார்கள்.

ஆக்கிரமிப்பாளனால் உயிர் எடுக்கபட்ட இரத்தம் சொட்டு காதலனை காதலியும் காதலியை காதலனும் மடியில் வைத்து இட்ட ஓலத்தாலும் நிரம்பியிருந்தது முள்ளிவாய்க்கால் கேட்டுப்பாருங்கள் அந்த ஒற்றைப்பனைகள் அந்த பிரிவின் கதையை ஒவ்வொன்றாய் சொல்லும் விம்மும்.

ஈழத்தின் காதலர்கள் குண்டுகளால் புதைக்கப்படுவதை தாஜ்மகால் எனும் காதலின் சின்னம் இருக்கும் தேசமும் ரசித்துக்கொண்டிருந்தது.ரைற்றானிக்கை ரசித்து அதில் கரைந்து அழுதுகொண்டாடிய பூமியின் கண்களும் பார்த்துக்கொண்டிருந்தன.

மேஜதாவின் ஒற்றை நொடிப்பார்வைக்காக காத்துக்கிடந்த கலீல் ஜிப்ரானின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது.ஈவாபிரவுனின் கைநகங்களுக்கு என்ன வர்ணம் பூசலாமென பல இரவுகள் சிந்தித்த கிட்லரின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது. சாந்திபேவின் கன்னக்குழியில் மூழ்கிய சாக்கிரடீசின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது.

லைலா மஜுனுவின் தேசங்களும் கிளியோபட்ரா ஆண்டனியின் தேசங்களும் பார்த்துக்கொண்டிருந்தன ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் ஆக்கிரமிப்பாளனின் குண்டுகளில் காதலர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

நன்றி முகநூல்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net