முருகன் – நளினி மருத்துவமனையில்

முருகன் – நளினி மருத்துவமனையில்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முருகன் – நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுனர் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் பல மாதங்களாகியும் ஆளுனர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்ற நிலையில் இருவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில்தான் சிறையிலேயே இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net