பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்!

பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்!

பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேற்றையதினம் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்.

இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா தாக்குதலைக்கு எதிர்வினையாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.

முன்னதாக புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த முரண்பாடு தற்போது ஆசிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலினால் இந்தியாவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை இத்தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாற்பது படைவீரர்கள் கொல்லப்பட்டமையானது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. மத்தியில் தன்னுடைய அயல்நாட்டுக் கொள்கையை சரியாகப் பயன்படுத்தி வருவதாக மோடி தலைமையிலான அரசாங்கம் குறிப்பிட்டுவரும் நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய தூதுவரை மீளப் பெற்றுக் கொண்டதன் மூலமாக இந்திய அரசாங்கம் முதல் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இத்தாக்குதல் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டினை பாரதிய ஜனதாக் கட்சி எவ்வாறு கையாளப் போகின்றது என்பது தொடர்பில் தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

எதுவாயினும் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல் மூலமாக இந்திய பாகிஸ்தான் உறவில் மீண்டும் பாரியதொரு பிளவினை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஜம்மு காஸ்மீர் விவகாரத்தில் பெரும் சிக்கல் நீடித்துவரும் நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 4932 Mukadu · All rights reserved · designed by Speed IT net