தமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாகவுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே இந்த நாட்டையும் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இக் கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் முன்னிலையில் மேற்படி வேண்டுகோளை சித்தார்த்தன் விடுத்திருந்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் வடக்கிற்கு வந்துள்ளனர். அவர்களிடம் எங்களது பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளோம்.

குறிப்பாக இந்தப் பிரதேசத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் பிரதமரிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார். அவற்றை தீர்த்துவைக்குமாறு அமைச்சர்களைப் பிரதமர் பணித்திருக்கின்றார்.

இந்த நாட்டில் நீண்டதொரு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. இந் நிலையில் தற்போது அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் இங்கு வருகை தந்திருக்கின்றனர். அவ்வாறு இவற்றை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது.

ஆனாலும் இந்தஅரசாங்கம் எமது பகுதிகளில் மேற்கொள்ளும் அபிவிருத்திவேலைகள் அல்லது உதவிகள் என்பன யானைப் பசிக்கு சோளப் பொரிபோன்றதாக இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

ஆனால் அதனையும் விட அதிகளவிலான செயற்பாடுகள் தற்போது நடைபெறுகின்றன. ஆகவே எமது பிரதேசத்தில் முழுமையான அபிவிருத்தியும் பிரதேசத்திற்கான உதவியும் மிகவும் தேவையாக உள்ளது. அதனை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஆனால் தீர்வுதான் வரவில்லை. ஆகவே தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென நாங்கள் கோருகின்றோம்.

தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடியதான அத்தகையதொரு தீர்வுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் உதவவேண்டுமெனக் கேட்கின்றோம்.

குறிப்பாக பிரதமரும் அவரது கட்சியான ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சியும் இணைந்து ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவவேண்டும் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net