அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும்!

அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் உடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆளுநர் சுரேன் ராகவன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும் கலந்துரையிடப்பட்டது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், இலங்கை பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகளும் பண்ணை நிலங்களும் மக்களிடம் படிப்படியாக கையளிக்கப்படுவதை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதன் விளைவாக, வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆளுனர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியா சென்ற அகதிகளை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை, உதவ வேண்டும் என ஆளுநர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணமானது யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே இங்கு ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமது நன்றியையும் ஆளுநர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net