தலைமன்னார் – கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை.

தலைமன்னார் – கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை. – மன்னாரில் பிரதமர் தெரிவிப்பு

தலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கிணங்க தலைமன்னாரில் பொருட்கள் துறைமுகமொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதற்கான பணிப்புரைகளை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்றுப் பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்களான ரிசாட் பதியுதீன். பி.ஹரிசன், வஜிர அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் இங்கு மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்படும்.

அது தொடர்பில் கொழும்பில் பாதுகாப்புக் கவுன்சிலில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

இ தேவேளை, மன்னாரில் சிலாவத்துறை, முள்ளிக்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் அக்காணிகளை மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளின் அத்துமீறிய பிரவேசத்தால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் அத்துடன் கல்பிட்டியூடாக மன்னார் கடற்பரப்பில் இடம்பெறும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமது அவதானத்தைச் செலுத்திய பிரதமர், அது தொடர்பில் கொழும்பில் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net