தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்!

தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்!

தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த சட்டமூலம் பாதகமானது. அதனை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குறித்த சட்டமூலம் இயற்றப்பட்டு நடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றவதற்கு சில வேளைகளில் 2 வருடங்கள் கூட ஆகலாம். அதற்கான வாதப்பிரதிவாதங்கள், குழு விவாதங்கள் போன்ற விடயங்கள் உள்ள நிலையில் அதனை உடனடியாக நிறைவேற்ற முடியாது.

அத்துடன், அண்மையில் கிளிநொச்சியில் பிரதமர் மன்னிப்போம் மறப்போம் எனக் கருத்துத் தெரிவிக்கும்போது குறுக்கிடவோ, அல்லது எழுந்து வெளியேறவோ முடியாது. நாகரீகம் கருதி அமைதியாக இருந்தோம்.

கடந்தகாலத் தவறுகளை மறப்போம் மன்னிப்போம் எனப் பிரதமர் தெரிவித்த கருத்தின் மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4334 Mukadu · All rights reserved · designed by Speed IT net