காஷ்மிர் பகுதியில் போர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய விமானப்படை?

காஷ்மிர் பகுதியில் போர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய விமானப்படை?

அண்மையில் காஷ்மிர் புலவாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மிர் பகுதியில் தொடர்ந்தும் போர் பதற்றம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்துவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்காக இந்திய படையினர் கடந்த சில நாட்களாகவே கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் போர் வெடிக்ககூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி உள்ளது.

இதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது.

புலவாமா தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே இந்திய விமானப்படை போர் ஒத்திகையை நடத்தி இருப்பதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு இந்திய படையினர் தயாராவதாகவே தெரிகிறது.

இதனிடையே, “பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்” பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புலவாமா தாக்குதல் குறித்து முதன்முறையாக பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிந்தால் எங்களிடம் ஆதாரங்களை கொடுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், “தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது நம்பிக்கையற்ற வார்த்தைகள்” என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net