வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து!

வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் மரணம் எய்தியது இந்தியா முழுதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கே மதவாத கலவரங்களுக்கும் வன்முறைகளுக்குமான நாசவிதை தூவப்பட்டு வருவதும் ஒருபுறம் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகே மேற்கு வங்கத்தில் காஷ்மீர் மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வசைமொழிக்கும் அவர்கள் இலக்காக்கப்பட்டு வருகின்றனர்.

காஷ்மீர் ​டாக்டர் ஒருவரை பா.ஜ.க கும்பல் ஒன்று கடுமையாக வசைபாடியதோடு தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது, அவரை மிரட்டவும் செய்த பிறகு உடனடியாக பொலிஸ் காவல் அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பிற பகுதிகளைப் போல் ஊர்வலங்களுக்குப் பெயர் பெற்ற கொல்கத்தா நகரில் வெகுஜன ஆவேச ஊர்வலங்கள் பல நடைபெற்று வருகின்றன.

“இந்தக் ஊர்வலங்களில் கலந்து கொண்டு வெறி/பீதி நிலையில் கடும் கூச்சல் கோஷம் போடுபவர்கள் பெரும்பாலும் 15 முதல் 20 வயதுடையவர்கள் என்றும் கோஷங்கள் ‘பாகிஸ்தான் ஒழிக’ என்பதில் தொடங்கி ‘நரேந்திர மோடி வாழ்க’ என்பதாக முடிகிறது” என்று பேராசிரியர்கள் அகமெட் மற்றும் சென்குப்தா ஆகியோர் ஊடகத்துக்குக் கூறினார்.

அதே போல் புல்வாமா சம்பவம் எப்படி ஒரு வகையான வெறித்தனமான தேசியவாதக் கூச்சல்களுக்கு இடமளிக்கிறது என்ற வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவோரும் கடுமையாக வெறுப்புக்கும் வசைக்கும் இலக்காக்கப்படுகின்றனர்.

உதாரணமாக, வட கொல்கத்தாவில் உள்ள ‘டெல்லி பப்ளிக்’ பாடசாலையில் பணியாற்றும் சித்ரதீப் சோம் என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கப் பதிவுகளின் மூலம் தன் வழியில் வரும் வன்முறைகளை அறிந்திருக்கவில்லை.

அவரும் தன் முகநூல் பக்கத்தில் சூழ்நிலையின் உஷ்ணம் புரியாமல் ‘கொலையுண்ட இராணுவ வீரர்களை ஏன் தியாகிகள் என்று அழைக்க வேண்டும், இவர்கள் என்ன போரிலா மடிந்தார்கள்?’ என்ற தொனியில் பாமரத்தனமாக எழுதியிருக்கிறார்.

மேலும் அவர் தன் பதிவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைப்பு ஒன்றை மேற்கோள் காட்டி அதில் மரணம் எய்திய வீரர்களை ‘சண்டையில் பலியானவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரது முகநூல் பக்கம் எப்படிப் பரவியது என்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் திடீரென இவர் வீட்டுக்கு 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடும் ஆவேசத்துடன் வந்தது. வீட்டில் உள்ளவர்கள் ‘ஆசிரியர் சோம் இல்லை’ என்று கூற கும்பல் கதவுகளை உடைக்கத் தொடங்கியது.

உடனே வெளிப்பட்டார் சோம். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கும்பல் வலியுறுத்த, அவர் மன்னிப்புக் கேட்டார்.

பிறகு ‘பாரத் மாதா கி ஜெய் என்று சொல்’ என்று அவரை வற்புறுத்தியது கும்பல். இவர் பயந்து போய் தன் வீட்டைக் காலி செய்து கொண்டு கொல்கத்தாவுக்கே வந்து விட்டதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் விஷயம் இதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை, இதையும் தாண்டி அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவரது முந்திய வீட்டை கும்பல் சூறையாடியது. இதோடு நிற்காமல் பாடசாலை ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்ய பாடசாலை நிர்வாகம் வலியுறுத்த, அவர் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்.

இன்னொரு நபர் தன் முகநூல் பதிவில் ’40 வீரர்கள் பலியாவதற்கு பா.ஜ.கதான் காரணம் என்று தன் முகநூலில் எழுத, தன் எல்.ஐ.சி. வேலையை அவர் இழந்தார். அவர் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பெயர் கிருஷ்ணந்து சென்குப்தா என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

‘புல்வாமா சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம். அதை மதவாத கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்’ என்று பிரசாரம் செய்த இன்னொரு சமூக ஆர்வலரின் வீட்டையும் 30-40 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இவரால் இன்னமும் வீடு திரும்ப முடியவில்லை.

ஆங்காங்கே காஷ்மீரிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எல்.ஜி.பி.டி சமூக செயல்பாட்டாளர்கள்தான் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net