நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது!

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது!

நல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில் கண்காணிப்புக் கமரா பொருத்துதல் தொடர்பான செலவு அறிக்கையில் 4 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையில் அதனைச் சீர்செய்யும் வகையில் இன்றைய அமர்வில் திருத்தி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையில் கமராவின் பெறுமதி குறைத்துக் காட்டப்பட்டதோடு குறித்த நான்கு இலட்சம் ரூபாவிற்கும் வேறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டிந்தன என்றும் அவையே தவறுதாலாக கமராக் கணக்குடன் சேர்க்கப்பட்டதாகவும் கணக்காளரினால் கூறப்பட்டபோதும் அவை என்னென்ன விடயங்கள் என்பது குறித்து வெளிப்படுத்திருக்காத நிலையில் இன்றைய அமர்விலும் சர்ச்சை ஏற்பட்டது.

முதலில் சபைக்கு வழங்கிய நல்லூர் கந்தசுவாமி கோவில் வரவு செலவு அறிக்கையில் கண்காணிப்பு கமரா பொருத்தல் செலவு என 10 இலட்சத்து 76 ஆயிரத்து 480 ரூபா எனக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை 6 இலட்சத்து 53 ஆயிரத்து 900 ரூபாவாகும்.

இவ்விடயம் கடந்த சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பார்த்திபனால் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்போது கணக்காளர் அது தொடர்பில் அடுத்த சபை அமர்வில் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். முதல்வரும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சபை அமர்வின் போது இது தொடர்பில் எந்த விளக்கமும் தெரிவிக்காமல் திருத்தப்பட்ட நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா செலவுக் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் கண்காணிப்பு கமாரக்களுக்கான செலவு என கடந்த சபை அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பார்த்திபனால் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்ட 6 இலட்சத்து 53 ஆயிரத்து 900 ரூபாவே உண்மையானது என ஏற்கப்பட்டதோடு கூடுதலாக காட்டப்பட்ட 4 இலட்சத்து 22 ஆயிரத்து 580 தொடர்பில் விவரமான பதிலளிக்கப்படாமல் வேறு கணக்குகளை கமராக் கணக்குடன் இணைத்துவிட்டதாக மழுப்பல் பதிலளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த உறுப்பினர் பார்த்திபன்,

“ஒரு செலவுடன் இன்னொரு செலவினை சேர்த்து போடுதல் என்பதனை ஏற்று கொள்ளமுடியும் ஆனால் எதை எதை சேர்ந்து போடப்பட்டது என்பதனை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இன்று வரை கமராச் செலவுடன் எந்த செலவை சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை அது பற்றி வினாவிய போது ஆராய்நது கொண்டு இருப்பதாகவும் அந்த செலவை சேர்த்திருக்கலாம் இந்தச் செலவைச் சேர்த்திருக்கலாம் என்று ஒரு எழுந்தமானமாக தெரிவக்கப்பட்டது இது ஏற்புடையது அல்ல.

2018 ஆம் ஆண்டு மட்டுமல்ல இது 2017 ஆம் ஆண்டிலும் நடைபெற்று இருக்கின்றது. 2017 நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் வேறு ஒரு நிறுவனம் கண்காணிப்பு கமாராக்களினைப் பொருத்தியது. 27 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தியதற்கான செலவு 13 இலட்சத்து 96 ஆயிரத்து 92 ரூபா.

இத் தொகை அவ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந் நிறுவனம் ஒரு கமராவின் கொள்விலை பெறுமதி 12 ஆயிரத்து 500 ரூபா என பற்றுசீட்டில் உள்ளது. ஆனால் அந்த நிறுவனததிடம் நான் அக் கமராவின் விலை எவ்வளவு என்று கூறு விலை பெற்ற போது அந்த நிறுவனம் எனக்கு தந்த கொகை 6 ஆயிரம் ரூபா.

இந் நிலையில் 2018 ஆண்டு வேறு ஒரு நிறுவனம் 32 கமராக்களினை பூட்டியது அதற்குரிய செலவு 6 இலட்டத்து 59 ஆயிரம் ரூபா. அச் செலவினைத்தான் 10 இலட்சத்து 76 ஆயிரத்து 480 ரூபா எனக் காட்டப்பட்டுள்ளது எனவே இப் பிரச்சனை காலாகாலமாக காணப்படுகின்றது.

நல்லூர் திருவிழா காலங்களில் பலத்த சர்சகைளுக்கும் மத்தியில் கச்சான் காரர்களிடம் ஏனையோர்களிடமும் பெருந்தொகை வரி அறவிடப்படுகின்றது . நல்லூர் பெருந்திருவிழாவானது சிறு வியாபாரிகளின் வாழ்வாதரதிற்கு தான் பயன்படுத்தப்பட்டது.

உங்கள் அனைவருக்கும் தெரியும் கடற்கரும்புலி அங்கயற்கண்ணி கரும்புலியாக செல்லும் முன் தேசியத் தலைவரிடமும் அவள் கேட்டது நான் நல்லூர் திருவிழா காலத்தில் கரும்புலியாக செல்ல அனுமதி வேண்டும் என்று ஏன் என்றால் எனது அம்மா ஒரு கச்சான் வியாபாரி நல்லூர் திருவிழா காலத்தில் தான் வியாபாரம் அதிகம் நடைபெறும் அத் தருணத்தில் நான் வீரச்சாவடைந்தால் எனது மரண வீட்டுக்கு வருபவர்களுக்கு அம்மாவால் ஒரு குவளை தேனீர் வழங்கலாம் என்று கூறினாள்.

அவ்வாறு நல்லூர் திருவிழா காலத்தை தமது வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்துகின்றவர்களிடம இருந்து வரியைப் பெற்றுக்கொள்ளுகின்றோம் அவ் வரியினை உரியமுறையில் பன்படுத்த வேண்டும். எனவே இவ்வாறான கணக்கு நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளவே முடியாது இதற்கு உரிய பதில் அழிக்கப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஆர்னோல்ட் நல்லூர் பெருந்திருவிழாவின் போது செலவு செய்யப்பட்ட தற்குரிய ஆவணங்களை உடடியாக காணக்காய்வுக்கு அனுப்பி கணக்காய்வின் இறுதி அறிக்கையினைப் பெற்று சபையில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net